கடலூர்: குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெருமாள் ஏரிக்கரையில் குள்ளஞ்சாவடி காவல்துறையினர் நேற்று(ஜூன் 29) ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் இரண்டு இளைஞர்கள் இருந்ததைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரணை செய்தனர்.
இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், அவர்களை குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
விசாரணையில், இளைஞர்கள் இருவரும் குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டு சாகை பகுதியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி மகன் விஜய், அதே பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மகன் கவியரசன் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து இவர்கள் இருவரும், யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயார் செய்து, அதனைக் கொண்டு முயல் பறவைகளை வேட்டையாடி வந்ததாகவும், காவல்துறையினரைப் பார்த்து, துப்பாக்கியை அங்கேயே மறைத்து வைத்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், ரவைகளைப் பறிமுதல் செய்தனர். இளைஞர்களை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நண்பனை தலையில் வெட்டிய மூன்று பேர் கைது!