கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
தமிழ்நாட்டிலும் கரோனா தீவிரமடைந்துள்ளது. நேற்று மட்டும் மேலும் 105 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரேநாளில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதேபோல கடலூர் மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை உள்பட மேலும் ஆறு பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லிக்குப்பம் பகுதியில் இரண்டு வயது பெண் குழந்தைக்கும், சிதம்பரம் பகுதியில் ஆறு வயது சிறுவனுக்கும், காட்டுமன்னார்கோவிலில் இரண்டு பேருக்கும், பண்ருட்டியில் இரண்டு பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்முலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.
கடலூரில் ஆரம்பத்தில் கரோனா தொற்று இல்லாத நிலை இருந்தது. ஆனால் சில நாள்களில் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே கடலூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்துக்குள் வந்துவிட்டது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஐந்து பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதனிடையே மே 3ஆம் தேதி வரை கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்லறையில் மரித்த மனிதம்... கரோனாவால் உயிரிழந்த டாக்டர் உடலைப் புதைக்க மக்கள் எதிர்ப்பு!