கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் சில்வர் பீச் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்த நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவரின் கழுத்திலிருந்த 13 சவரன் தங்கச்சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துக் கொண்டு சென்றனர். இதுகுறித்து அப்பெண் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதேபோல் நெல்லிக்குப்பம் பகுதியில் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்த பொதுப்பணித் துறை பெண் ஊழியர் ஒருவரிடமிருந்தும், ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் மனைவியிடமிருந்தும் தங்கச்சங்கிலிகளைக் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.
மாவட்டத்தில் இதேபோன்று செயின் பறிப்பு, வழிப்பறிக் கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்ததையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின்பேரில் டெல்டா பிரிவு துணை ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை தேடப்பட்டு வந்தனர்.
இச்சூழலில், தனிப்படையினர் கடலூர் புதுநகர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், சந்தேகமடைந்த தனிப்படையினர் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஒருவர் கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த சிவராமன் (40) என்பதும், மற்றொருவர் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தைச் சேர்ந்த செல்வமணி (38) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து கடலூர் நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் பெண்களின் கழுத்தில் இருக்கும் தங்கச்சங்கிலிகளைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
மேலும் கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர்கள் மீது 25க்கும் மேற்பட்ட கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 20 சவரன் தங்கநகைகளைப் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கொள்ளையர்கள் இருவரும் கடந்த 10 நாள்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுத்த காதலியை உயிருடன் எரித்தவர் கைது!