கடலூர் அடுத்த திருவந்திபுரம் புதுநகர் குமாரபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (34). இவர் பந்தல் அமைக்கும் பணி செய்து வந்துள்ளார். இவரது நண்பர் சங்கர் (30) திருமானிக்குழி குறவர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து யூட்யூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்து குருவி உட்பட பறவைகளை வேட்டையாட முடிவு செய்துள்ளனர். மேலும், அதற்கு தேவையான பொருள்களை வாங்கி குமாரப்பேட்டையில் உள்ள ஆறுமுகம் வீட்டில் வைத்து தயாரித்துள்ளனர்.
இது குறித்து திருப்பாதிரிபுலியூர் காவல் ஆய்வாளர் குணசேரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்கு இருவரும் நாட்டு துப்பாக்கி தயாரித்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஆறுமுகம் (34), சங்கர் (30) ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய துப்பாக்கி மரக்கட்டை, சுத்தி உள்ளிட்ட பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த 4 பேர் கைது