புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கடலூரில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரமாக மழை பெய்தது.
அதேபோல், இன்று மாலை 6 மணிக்குமேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இடி தாக்கியதில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிரவீன்குமார் (16), ராம்குமார் (17) ஆகிய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேபோல், விருதாச்சலம் பகுதியில் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த சின்னத்துரை (50) என்பவர் இடி தாக்கி உயிரிழந்தார். இவர்கள் உடலை காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இடி தாக்கி மாணவர்கள் உள்பட மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இருசக்கர வாகன விபத்து: வேலூரில் இருவர் உயிரிழப்பு