கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரிபைண்ட் சைனிஷ் என்று எழுதப்பட்ட எட்டு பொட்டலங்கள் கிடந்துள்ளன.
இதனை, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் எடுத்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அந்தப் பொருளை போலீசார் ஆய்வு செய்யாமல் காவல் நிலையத்திற்கு பின்னால் உள்ள குப்பைத் தொட்டியில் வீசி உள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 20ஆம் தேதி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் இதேபோல் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டு, அதனை ஆய்வுக்கு அனுப்பி பார்த்ததில் போதைப் பொருள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதியில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு இரண்டு பொட்டலங்களில் போதைப்பொருள்கள் கிடைத்ததாக வழக்குப்பதிவு செய்து, காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இச்சம்பவம் குறித்து சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டு, பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன், தனிப்பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராம்குமார் மற்றும் காவலர் பாக்கியராஜ் ஆகிய மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றுவதற்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'பயண விவரங்களை குறித்துக் கொள்ளுங்கள்'- பினராயி விஜயன்