திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர் அமிர்தத்தை கொடியேற்ற விடாமல் தடுத்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அமிர்தம் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவமதிக்கப்பட்டார். இதனையடுத்து அரசு அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அமிர்தத்தை அரசுப்பள்ளியில் கொடியேற்ற வைத்தனர்.
அந்த வடு மறைவதற்குள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள புவனகிரியில் மீண்டும் ஒரு சாதிய வன்மச் சம்பவம் அரங்கேறியுள்ளது. புவனகிரி தெற்குதிட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 100 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சரவணக்குமார் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆறு உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சியில் ஒரு உறுப்பினர் ஆதிதிராவிடர் மீதி 5 பேர் மாற்று சமூகத்தினராவர். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதிக்கச் சிந்தனையில் உள்ளதால், ராஜேஸ்வரியை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்ற விடவில்லை. அவருக்குப் பதிலாக துணைத்தலைவராக உள்ள மோகன் ராஜா கொடியேற்றியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஊராட்சிக் கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி தரையில் உட்கார்ந்திருந்ததும் மற்றவர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.
துணைத்தலைவர் மோகன் ராஜா மிரட்டுகிறார்
இதுகுறித்து ராஜேஸ்வரியின் கணவர் கூறுகையில், "சம்பவங்கள் அனைத்தும் உண்மைதான். ஊராட்சித் தலைவரான எனது மனைவி ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேந்தவர் என்பதால் கொடியேற்ற விடாமல் தடுக்கப்படுகிறார். துணைத் தலைவர் மோகன் ராஜா எப்போது கூட்டம் நடத்த சொல்கிறாரோ அப்போதுதான் கூட்டம் நடத்த வேண்டும். இது வெளியே தெரிந்தால் எதுவும் நடக்கும் என மிரட்டுகிறார். இதனால், இதை வெளியே சொல்வதற்கு பயமாக இருந்தது. மற்ற ஊராட்சி உறுப்பினர்கள் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தொடர்ந்து மிரட்டல் விடுக்கின்றனர்" என்றார்.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி உத்தரவிட்டுள்ளார். தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகன் ராஜா மற்றும் ஊராட்சி செயலர் சிந்துஜா மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியை அடித்து கண் பார்வை இழந்த மாணவன் உயிரிழப்பு!