கடலூர்: சிதம்பரம் நகரில் உள்ள அண்ணா தெருவைச் சேர்ந்தவர், ராஜா. இவரது 2 வயது மகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் வாசல் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக சென்ற பன்றி ஒன்று இந்த குழந்தையின் கையை கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை சிதம்பரத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதையடுத்து சிதம்பரம் நகரில் பன்றியின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், குழந்தைகளை பன்றி கடிப்பதாலும், நகர மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாலும் பன்றிகளை நகராட்சி அலுவலர்கள் பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகரிலுள்ள பன்றிகளைப் பிடிப்பதற்காக வெளியூரில் இருந்து ஆள்கள் அழைத்து வரப்பட்டனர்.
இதில் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவர் நகராட்சியின் அனுமதிபெற்று சிதம்பரம் நகரில் பன்றிகளை பிடித்துள்ளார். அப்போது பைசல் மஹால் என்ற இடத்தில் பன்றி பிடித்துக்கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் பன்றியை வளர்ப்பவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போது சங்கர், பழனியம்மாள், முருகன், அமுதா மற்றுமொரு சங்கர் ஆகியோர் சேர்ந்து பன்றியைப் பிடித்த ஜீவாவை ஓட ஓட விரட்டி கடுமையாகத் தாக்கினர். இந்தச்சம்பவம் குறித்து ஜீவா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவி, குழந்தையை ஆட்டோவில் தீ வைத்து எரித்து இளைஞர் தற்கொலை - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!