கரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் மது குடிக்காமல் விரக்தியில் இருந்தனர். அந்த விரக்தியில் வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சுவது, சாராய ஊறல் போடுவது என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
கடலூரில் மது கிடைக்காமல் எத்தனாலை குடித்து மூன்று பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி மாநிலத்திலிருந்து ரகசியமாக மது கடத்திவந்து, பல மடங்கு விலையை உயர்த்தி சிலர் விற்பனை செய்து வந்தனர். இதனால், காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி 30க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு நேற்று சென்னையைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது.
கடலூரில் 21 பாதுகாப்புப் பகுதிகளைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் டாஸ்மாக் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நாளை டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள குடோனிலிருந்து மது பாட்டில்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.
டாஸ்மாக்கில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கு ஏற்றவாறு தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்