கடலூர்: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகேவுள்ள விஜயமாநகரம், புது வெண்ணைக் குழியைச் சேர்ந்தவர் வேலு மகள் கண்ணகி (19). வேப்பூர் அருகே ஐவதகுடியிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில தினங்களாக தனது தாய் ராஜலட்சுமி உடன் மங்கலம்பேட்டை அருகே பள்ளிப்பட்டு கிராமத்திலுள்ள தனது சகோதரி வேதவள்ளி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்ப வீடு வரவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், கண்ணகியின் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து, இது குறித்து மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் அவரது தாய் ராஜலட்சுமி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று ரூப நாராயண நல்லூர் ஏரியில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக மங்கலம்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில் அவர் காணாமல் போன புது வெண்ணைக்குழியைச் சேர்ந்த கண்ணகி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து கண்ணகியின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததால் மீன்கள் நண்டுகள் கடித்து காயம் ஏற்பட்டதா? அல்லது யாரேனும் கொலை செய்து விட்டு ஏரியில் வீசி சென்றனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் மங்கலம்பேட்டை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞர் - தொழில் செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு