கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மது பிரியர்கள் மது குடிக்காமல் மிகவும் அவதி அடைந்து வந்தனர். கடலூரில் மது பிரியர்கள் தங்களது வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சுவது, சாராய ஊறல் போடுவது என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதில், சில இடங்களில் மது கிடைக்காமல் எத்தனாலை குடித்து மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் புதுவை மாநிலத்திலிருந்து ரகசியமாக மதுவைக் கடத்தி வந்து, பல மடங்கு விலை வைத்து விற்பனை செய்து வந்த 300க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி கடலூரில் 21 பாதுகாப்பு மண்டலங்களைத் தவிர, மற்ற அனைத்துப் பகுதிகளிலும் டாஸ்மாக் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்திருந்தார். கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள குடோனில் இருந்து மது பாட்டில்கள், கடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகளில் வைக்கப்பட்டது.
மேலும் டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சமூக இடைவெளியைக் கடைபிடிக்க தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எவ்வித விதி மீறல்களும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை முதலே மது வாங்குவதற்கு வரிசையில் நிற்கத் தொடங்கிய மக்கள், 10 மணிக்கு மது கடைகள் திறக்கப்பட்டவுடன் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பிரியர்கள் தங்களுடைய ஆதார் கார்டை காண்பித்து தங்களுக்குத் தேவையான மதுபாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
இதையும் பார்க்க: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: நிலைமையை கண்காணித்து வருகிறோம் - பிரதமர் மோடி