கடலூர்:வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் அன்று டெல்லியில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலத்தின் சார்பில் கண்கவர் அணிவகுப்பு நடைபெறும்.
இதுபோன்று பல வருடங்களாக நடைபெற்று வருகின்ற நிலையில் இவ்வாண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தியின் அனுமதியை மறுத்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசு:
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,”இது மாநில உரிமைக்கும் தமிழருடைய பண்பாட்டிற்கும் மிகவும் எதிர்ப்பான ஒன்றாகும். தமிழ்நாட்டை போன்று மேற்கு வங்காளத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நமது அலங்கார ஊர்தியில் வா.உ.சிதம்பரம் பிள்ளையார்,பாரதியார் போன்றோருடைய படங்களும் தமிழ்நாடு தேசியத்திற்காக ஆற்றிய பங்கும் மிக தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தன்னுடைய காலங்களை இளமை பொங்கும் அந்த காலங்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னே செலவழித்த அற்புதமான தலைவர் வா.உ.சி .
இதேபோன்று புரட்சிக்கவி பாரதியார் இந்தியாவை எழுச்சி அடைய செய்தவர்,எனவே இவர்களை மையமாக வைத்து இருக்கிற அலங்கார ஊர்திகள் இடமில்லை என்பது ஒன்றிய அரசினுடைய சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகின்றது.தமிழ்நாடு காங்கிரஸ் இதை வன்மையாக கண்டிக்கின்றது.
ஒன்றிய அரசு தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் இதற்காக குரல் கொடுக்கும் வேண்டும் குறிப்பாக இன்றைக்கு எதிர் கட்சியாக உள்ள அதிமுக கண்டனம் தெரிவிக்க வேண்டும்.இது மாநிலத்தின் உரிமை சம்பந்தமானது. எனவே ஆளும்கட்சி,எதிர்க்கட்சி,தோழமை கட்சி எல்லோரும் சேர்ந்து தமிழருடைய ஒட்டுமொத்த குரலாக ஒலிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு மீண்டும் கரோனா தொற்று