கடலூர்: மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்னைகள், தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் அரசியல் நகர்வுகள் உள்ளிட்டவை குறித்து தகவல்கள், கள நிலவரங்களை காணலாம்.
கடலூர் மாவட்டத்தின், விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், பண்ருட்டி தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கடலூரில் அமைச்சர் எம்.சி. சம்பத், குறிஞ்சிப்பாடியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போட்டியிடுகின்றனர்.
மழை வெள்ள பாதிப்புக்கு அவ்வப்போது கடலூர் மாவட்டம் பாதிக்கப்படும். இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்போது உரிய நிவாரணம் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சிகள் தாழ்வான பகுதியில் தங்கியுள்ள மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும், மழை வெள்ள பாதிப்புக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
சாலை வசதி, முறையான குடிநீர் வசதி ஆகியவை இல்லை எனவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். காய்கறி வியாபாரிகளுக்கு நிழற்குடை அமைக்க வேண்டும், சந்தையில் கடை அமைத்து வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.சி. சம்பத் 10 ஆண்டுகளாக தொழில்துறை அமைச்சராக இருந்தபோதும் கடலூர் மாவட்டத்திற்கு சொல்லும்படியான புதிய தொழில் நிறுவனங்களையோ, முதலீடுகளையோ செய்து தரவில்லை என குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி, நெடுஞ்சாலை அமைத்தல், வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழிற்சாலைகளை நிறுவுதல் உள்ளிட்டவை இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.
இந்த மாவட்டத்தில் மீனவர்கள் அதிகளவில் உள்ளனர். டீசல் மானியத்தை அதிகரிக்க வேண்டும், மீன்பிடித் தடை காலத்தில் கூடுதலாக உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவை அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. திமுக சார்பில் மீனவர்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்கும் அறிவிப்பிற்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் வன்னியர் சமூக மக்கள், தலித் சமூக மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அதிமுக கூட்டணியில் பாமகவும், திமுக கூட்டணியில் விசிகவும் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகள் வாக்குகள் பிரதான கட்சிகளுக்கு செல்லுமா என்ற கேள்வியெழுகிறது.
எனினும், இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.