கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கம் இரண்டில் பாய்லர் வெடித்ததில் எட்டு பேர் உயிரிழந்தனர், 17 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் என்எல்சியில் விபத்து நடைபெற்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நெய்வேலி என்எல்சி சுரங்கம் இரண்டில் மே மாதம் ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் பாதிக்கப்பட்டு அதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இரண்டு மாதம் ஆவதற்குள் இன்று (ஜூலை 1) எட்டு பேர் உயிரிழந்ததாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
மேலும் பலர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது, நாங்கள் வைத்த கோரிக்கை என்னவென்றால் இந்த காலாவதியான பாய்லர்கள் மாற்றப்படவேண்டும். சிமினிகள் மாற்றப்பட வேண்டும். இந்த மின்சார உற்பத்தி நிலையங்களில் உள்ள காலாவதியான அனைத்து உபகரணங்களும் மாற்றப்படவேண்டும். ஒப்பந்தம், நிரந்தர ஊழியர்களுக்கான உயிர் உத்தரவாதம் அளித்த பின்னர் தெர்மல் இரண்டு இயங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
அதனை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் உடல் அடக்கம் செய்த பின்னர் உற்பத்தியை தொடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. தொழிற்சங்கங்களுக்கு கொடுத்த வாக்குறுதியும் பொதுமக்களுக்கும் கொடுத்த வாக்குறுதியை என்எல்சி நிர்வாகம் மீறி இருக்கிறது.
அதேசமயம் என்எல்சி நிர்வாகம் ஆண்டுக்கு 45 நாட்களுக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் அப்படி மேற்கொள்வதில்லை. மேலும் வடமாநில தொழிலாளர்களை பணி அமர்த்தி அவசர அவசரமாக பணி செய்து பணத்தை பெறுவதற்காக அவர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது இல்லை. சுற்றுச்சூழல் அலுவலர்களும் என்எல்சி பக்கம் ஆய்வுக்கு வருவதில்லை. இதனால் எங்கள் மக்கள் உயிர் இழந்து கொண்டு உள்ளோம்.
எனவே என்எல்சி தெர்மல் இரண்டில் உள்ள காலாவதியான பாய்லர்கள், ஏனைய உபகரணங்கள் மாற்றப்பட்டு, இங்கு உள்ள தொழிலாளர்கள் பிரதிநிதிகளை அழைத்து ஆய்வு செய்த பின்னரே இயங்கவேண்டும்" என்றார்.