கடலூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கக் கூட்டம் கடலூர் தேரடி வீதியில் நேற்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. அதில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று விட்டு விழுப்புரம் நோக்கி காரில் பயணித்துள்ளார்.
நெல்லிக்குப்பம் அருகே காராமணி குப்பம் சந்தைப் பகுதியை கடந்துச் சென்று கொண்டிருக்கையில், அமைச்சர் பயணித்த கார் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் நடுவீரப்பட்டியைச் சேர்ந்த ஜோதி என்பவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் வந்த போலீசார், உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் ஜோதி மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜோதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தான் வந்த வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்திய நிலையிலும் அமைச்சர் பொன்முடி காரை விட்டு இறங்கி கீழே வராமல் காருக்குள்ளே விளக்குகளை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் உடன் இருந்த திமுகவினர் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும், நீங்கள் புறப்படுங்கள் என தெரிவித்ததை அடுத்து அவரது கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
மூத்த அமைச்சர் பொன்முடியின் இந்த செயல் இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது, இந்த விபத்தில், இருசக்கர வாகனம் சேதமடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் காரிலும் நம்பர் பலகை உள்ளிட்ட இடங்களில் சிறிது சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் கார் ஓட்டுநர் ரகுபதி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மதுபோதையில் வந்த இரண்டு நபர்கள் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி, அமைச்சரின் கார் மீது மோதி சேதப்படுத்திய வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திராவிட சித்தாந்தம் காலாவதியா? ஆளுநரின் பேச்சுக்கு முதலமைச்சர் பதிலடி!