கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த சிறு பாலையூரைச் சேர்ந்தவர் சுரேஷ்(32). கூலித்தொழிலாளியான இவருக்கு சந்தியா(27) என்ற மனைவியும், நான்கு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சந்தியா தன் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், அவர்களை சோதனையிட்டதில் கெரசின் கேன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த மனுவில், “என் கணவர் சுரேஷ் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் மது போதையில் என் கணவரிடம் புகையிலை கேட்டு தகராறு செய்தார். இதில் ராமகிருஷ்ணன் கால் தவறி கீழே விழுந்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகார் தெரிவித்ததையடுத்து, என் கணவரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் துறையினர், எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தோம். அதன்பிறகு புதுச்சத்திரம் போலீசாரால் எந்தவித தொந்தரவும் வரவில்லை. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி உதவி ஆய்வாளர் சத்தியசீலன், போலீசார் என்னிடம் வந்து எனது கணவரை இன்றுக்குள் ஒப்பப்படைக்க வேண்டும் என மிரட்டிச் சென்றனர். எந்த தவறும் செய்யாத என் கணவர் மீது போலீசார் ராமகிருஷ்ணன் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டு எங்களை துன்புறுத்தி வருகின்றனர். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதே நிலை நீடித்தால் நாங்கள் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. மேலும் மேற்கண்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.