கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த காரணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (48). இவருக்கு ஸ்ரீநிதி (16) என்ற மகளும் தனுஷ் (11) என்ற மகனும் உள்ளனர். இதில் ஸ்ரீநிதி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பும் தனுஷ் ஐந்தாம் வகுப்பும் படித்துவந்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் ஸ்ரீநிதியும், தனுசும் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் படித்து வந்தனர். வீட்டில் உள்ள ஒரு செல்ஃபோனில் இரண்டு பேரும் படித்துவந்தனர். இதனால் முதலில் அந்த செல்ஃபோனை யார் கைப்பற்றுவது என இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி செல்ஃபோனில் பாடம் படிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அவரது பெற்றோர் ஸ்ரீநிதியை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஸ்ரீநிதி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதனையடுத்து ஸ்ரீநிதியை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.