நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கடலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் விதத்தில் வாக்குச்சாவடி மையங்களில் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களில் தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கடலூரில் அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்கனவே சக்கர நாற்காலிகள் பெறப்பட்டுள்ளன. இதனிடையில் சுயமாக சக்கர நாற்காலிகள் உள்ளவர்களிடமிருந்து ரூ.500 வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி கொள்ள தேர்தல் ஆணையம் முன்வந்துள்ளது. எனவே சக்கர நாற்காலியை வழங்கி உதவிட விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்புகொண்டு அல்லது முகவரிக்கு சென்று தங்கள் வாக்குச்சாவடி மையத்தில் விவரங்களை பதிவு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.