கடலூர்: திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருப்பூரில் வேலை செய்து வரும் நிலையில் இவரது மனைவி கஸ்தூரி (வயது 45) கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு தலா இரண்டு மகள், மகன்கள் உள்ளனர்.
இவர்களது பெரிய மகன் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், இளைய மகன் சேவாக் (வயது 21) போக்சோ வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி கஞ்சா போதையில் தனது வீட்டுக்கு வந்த சேவாக், தாயிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு சேவாக்கையும் அவரது தாய் கஸ்தூரியையும் காணவில்லை என அருகில் இருந்த உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இதனையடுத்து உறவினர்கள் பூட்டியிருந்த வீட்டை திறந்து பார்த்த போது வீட்டில் பாயில் ரத்த கரையும், அதற்கு அடியில் புதைக்கப்பட்ட நிலையில் மண் தரை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உறவினர்கள் உடனடியாக ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆவினங்குடி போலீசார் இளைய மகன் சேவாக்கை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சேவாக் கஞ்சா போதையில் அவரது தாயை அடித்து கொலை செய்து, வீட்டில் புதைத்து தெரியவந்தது. இதையடுத்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்ற பின்னர் மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு உடலை தோண்டி எடுக்கும் பணி நடைபெறுகிறது.
பின்னர் உடற்கூராய்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கஞ்சா போதையில் பெற்ற தாயை, மகனே அடித்து கொலை செய்து வீட்டிலேயே புதைத்து வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதையும் படிங்க: அரசு பேருந்தில் போலி டிக்கெட் மோசடியில் ஈடுபட்ட நடத்துநர் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?