கடலூர்: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையை உள்ளடக்கிய பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் புதுப்பேட்டைக் காவல் ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான காவல் துறையினர் கரும்பூர், ஒறையூர் மற்றும் திருத்துறையூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது திருத்துறையூர் கிராமத்தில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. அதேநேரம் இந்த சாராய விற்பனையை அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர்தான், அண்டை மாநிலமான புதுச்சேரியிலிருந்து சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்து நூதன முறையில் இடுப்பில் மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட முதியவரை காவல் துறையினர், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அழைத்து வரப்பட்ட முதியவர் அதே பகுதியைச் சேர்ந்த காத்தவராயன் (65) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் சாராய பாக்கெட்டுகளை இடுப்பில் கட்டி நூதன முறையில் விற்பனை செய்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முதியவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் இருந்து 50 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த புதுப்பேட்டைக் காவல் துறையினர், சாராய விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தீரன் பட பாணி.. நீலகிரியில் பவாரியா கும்பல்.. வனப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு..