நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வந்தது. இதில் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் வெள்ளம் வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வந்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள அரசுப் பள்ளி, சமுதாயக் கூடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தங்க வைக்கப்பட்டனர்.
தற்போது கடந்த இரண்டு தினங்களாக மழை சற்று குறைந்துள்ள நிலையில், அவர்களை அவரவர் வீடுகளுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும், தனியார் தொண்டு நிறுவனம் மூலம் ரூபாய் 10 லட்சத்துக்கான நிவாரண பொருட்கள் உள்ளிட்டவையும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.