மத்திய அரசால் புதிதாக அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட திருத்தம் அகில இந்திய அளவில் பொதுமக்கள், தொழிலார்கள், பணியாளர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றம் ஜனநாயகத்தின் அடிப்படையில் அரசிலமைப்பு சட்டத்தை ஏற்கவேண்டும். ஆனால், அரசு அலுவலர்களால் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை எல்லாம் தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்கும் வகையில் இந்த சட்ட திருத்தம் அமைந்துள்ளது.
போக்குவரத்து துறையில் கோடிக்கணக்கில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் பணிமனைகளுக்கு மாற்றம் செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் பேருந்து வசதி, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்தும் இந்த சட்டத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லால் இந்த வாகன சட்டதிருத்தத்தால் வாகனப்பதிவு, வாகன வரிவசூல், தகுதிச் சான்றிதழ், அனுமதி வழங்குதல் ஆகிய சேவைகளுக்கு வசூலிக்க கூடிய கட்டணங்கள் தனியாருக்கு கொடுக்கும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதனால் பேருந்து கட்டணம், அபராத தொகைகள் உயர்த்தப்பட்டு பொதுமக்களும், ஓட்டுநர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே மத்திய அரசு புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாளைய தினம் மாநிலம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகங்கள் முன்பு இன்று காலை 10 மணி முதல் 11 மணிவரை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.