கடலூர் மாவட்டம் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் இன்று (மே 13) காலை பாய்லர் விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரழந்துள்ளனர். மேலும், சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தன்னார்வ சுற்றுச்சுழல் பாதுகாப்பு அமைப்பான பூவலகின் நண்பர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை குறிப்பிட்டு:
"கடந்த மார்ச் மாதம் கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் அங்கு செயல்படும் ஆலைகளால் பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவான ஆய்வு நடத்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு, தாமதிக்காமல் இந்த ஆய்வை நடத்தி உரிய பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்." என பதிவிட்டுள்ளனர்.