கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரிய குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன். சிவபெருமான் (41). இவர் மருதூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவருகிறார்.
இவர் 'சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு' பாடல், 'கலை நிகழ்ச்சிகள்', 'பெண் குழந்தைகள் விழிப்புணர்வுப் பாடல்', காவல் துறையினர் பயிற்சியில் கற்றுக்கொண்ட நிகழ்வுகள் குறித்த பாடல் எனத் தொடர்ந்து விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடிவருகிறார்.
இந்நிலையில் இன்று உலகையே அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் குறித்து சிவபெருமான் பாடிய 'விரட்டிடுவோம், விரட்டிடுவாம் கொரோனாவை விரட்டிடுவோம்' என்ற விழிப்புணர்வுப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இது குறித்து அவர் பேசுகையில், "கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தினமும் செய்தித்தாள்களில் பார்க்கிறோம், தமிழ்நாட்டில் அந்தளவிற்குப் பாதிப்பு இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் நாம் தூய்மையாக இருந்தால் அதைக் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதனால் இது குறித்து ஒரு விழிப்புணர்வுப் பாடலை எழுதி பாடியுள்ளேன்.
நாங்கள் தொடர்ந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஒரு மணி நேரம் பாடல்கள், பேச்சு மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம். பொதுமக்கள் கூடும் இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். தற்பொழுது நான் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன்" என்றார்.
இதையும் படிங்க... மது தீமைக் குறித்த ஆடல், பாடல்... போலீஸ் விழிப்புணர்வு