கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பாமக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடலூர் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாமக சார்பில் இரா.கோவிந்தசாமி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இதையொட்டி சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கூட்டத்திற்கு அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட எம்.பி. அருண்மொழித்தேவன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில்,
'சில சமுதாய வாக்குகள் பாமகவுக்கு இல்லை என்ற பொய் பரப்புரையை முறியடிக்க வேண்டும். பாமக மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தீர்வு காணும் வகையில் செயல்படுகிறது.
திமுக கூட்டணி முரண்பாடுகள் கொண்ட கூட்டணியாகும். அதிமுக கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. எனவே கூட்டணியின் வெற்றிக்கு அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்' என்றார்.
தொடர்ந்து வேட்பாளர் இரா. கோவிந்தசாமி பேசுகையில், எந்த நிலையிலும் மக்களிடம் விசுவாசத்தோடு இருந்து தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றார். இக்கூட்டத்தில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.