கடலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) தீபா, டெல்டா பிரிவு உதவி ஆய்வாளர் நடராஜன் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சகிதம் மதுவிலக்கு குற்றம் சம்பந்தமாக எம்.புதூர் டிபி மருத்துவமனை அருகில் உள்ள முந்திரிதோப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் பழனி (40). இவர் சுமார் 15 கேன்களில் 525 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து எரி சாராயத்தை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இவர் மீது ஏற்கனவே 8 மதுவிலக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, இவரது குற்றச் செயலை கட்டுப்படுத்தும் வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, பழனியை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார். தற்போது அவர் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 5 வீடுகளில் திருட்டு! கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!