கடலூர்: சிதம்பரம் அருகே வள்ளம் கிராமத்தில் கன்னியம்மன் கோயில் மண்டபம் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. இதன் பின்புறத்தில் வெள்ளச்சி, குப்பன் ஆகியோரின் வீடுகள் உள்ளன. வீடுகளுக்குச் செல்ல போதிய வழி இல்லாததால் கோயில் மண்டபத்தை இடிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கோயில் மண்டபத்தை இடிக்க உத்தரவிட்டது.
அதன் பேரில் இன்று (ஜுன் 19) புவனகிரி தாசில்தார் அன்பழகன் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கன்னியம்மன் கோயில் மண்டபத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற வந்தனர்.
இதனைக் கண்ட கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர், கோயில் மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து, சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பபட்டனர்.
மண்ணெண்ணெய் கேன்களுடன் ஆர்ப்பாட்டம் செய்த கிராம மக்கள்:
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் திடீரென கையில் மண்ணெண்ணெய் கேன்களுடன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறினர். இதையடுத்து, பொதுமக்கள் கையிலிருந்த மண்ணெண்ணெய் கேன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், கிராம மக்களுடன் காவல் துறையினர் சமரச பேச்சுவார்ததை நடத்தினர். ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று வருமாறு போலீசார் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மருத்துவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டம்!