ஊரடங்கு உத்தரவு காரணமாக, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த ஏழாம் தேதி முதல் தமிழ்நாட்டில் அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, கடலூரில் 21 பாதுகாப்பு மண்டலங்களைத் தவிர, அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. விருதாச்சலம் நகர பகுதியில் 11 டாஸ்மாக் கடைகளில், விற்பனை நடைபெற்றுவந்தது.
ஆனால், இன்று காலை விருதாச்சலம் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள அரசு டாஸ்மாக்கை திறக்கக்கூடாது என அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடை மூடப்பட்டு, கடையை திறக்க வந்த ஊழியர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். மீண்டும் கடையை திறந்தால் தீக்குளிப்போம் என எச்சரித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த விருத்தாச்சலம் காவல் துறையினர், பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய அலுவலர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச்சென்றனர். பொது மக்கள் போராட்டத்தால் கடையை திறக்க முடியாமல் ஊழியர்களும், மதுபாட்டில்கள் வாங்க வந்த மது பிரியர்களும் கடை திறக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு: வேலையில்லாதவர்களை வஞ்சிக்கும் செயல்!