திட்டக்குடியை அடுத்த தி.இளமங்கலம் பகுதியில் மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி 239 மாட்டுவண்டிகளில் மணல் அள்ளுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தினமும் சுமார் ஆயிரம் மாட்டுவண்டிகள் முறைகேடாக மணல் அள்ளிவருகின்றன என்றும் இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
நாளுக்குநாள் மணல் அள்ளுவது அதிகரித்துகொண்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் விதிகளுக்கு புறம்பாக இயங்கும் தி.இளமங்கலம் மணல்குவாரியை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், திட்டக்குடி,கூத்தப்பன்குடிகாடு, மணல்மேடு பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் விதிகளை மீறி மணல் அள்ளிய மாட்டுவண்டிகளை சிறைப்பிடித்தனர்.
இதனைத்தொடர்ந்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மணல் குவாரியின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு - கொட்டும் மழையில் மக்கள் சாலை மறியல்!