கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகேவுள்ள காராமணிக்குப்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உள்பட 20 பேர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்றனர்.
பின்னர் அங்கு தங்கியிருந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில் அந்த 20 பேரும் சொந்த ஊரான காராமணிக்குப்பத்திற்கு ஈ-பாஸ் மூலம் திரும்பியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சரவணன் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள், வெளிமாவட்டத்திலிருந்து காராமணி குப்பத்துக்கு திரும்பிய 20 பேரையும் ஊருக்குள் வரவிடாமல் ஊர் எல்லையில் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள், நாங்கள் ஈ-பாஸ் பெற்றுதான் வந்துள்ளோம் என்று ஈ-பாஸை காண்பித்தனர். இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளாத ஊராட்சி மன்ற தலைவர், வெளிமாவட்டத்தில் இருந்து வந்த உங்களுக்கு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் வந்த பின்னரே ஊருக்குள் வர அனுமதிக்க முடியும் என திட்டவட்டமாக கூறினர்.
பின்னர் பொதுமக்கள் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஸ்வரன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து வெளிமாவட்டத்தில் இருந்து திரும்பிய 20 பேரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றனர். மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் அவர்கள் ஊருக்குள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் 20 பேரும் குணமங்கலம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.