கடலூர்: ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஏழை பெண்களின் திருமண நிதியுதவிக்கான ஆணை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜன.13) நடைபெற்றது.
இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து 50 பயனாளிகளுக்கு ரூ 18.98 லட்சத்தில் தலா 8 கிராம் தங்கத்தை வழங்கினார். பட்டதாரி அல்லாத 25 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், பட்டதாரிகள் 25 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் என மொத்தம் ரூ.37.73 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடலூரில் கரோனா மூன்றாம் அலையின் வேகம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட படுக்கைகளில் 7 சதவீதத்தில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மாவட்டத்தில் இதுவரையில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதுவரையில் 38 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்றார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கி. பாலசுப்ரமணியம், எம். ஆர். ராதாகிருஷ்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. சக்தி கணேசன், மாவட்ட சமூகநல அலுவலர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா தீவிரம்: கைதிகளுக்கு பண்டிகை கால பரோல் அனுமதி மறுப்பு!