கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி அனல்மின் நிலையம் அமைந்துள்ளது. அனல்மின் நிலையம் 2இல் உள்ள 6ஆவது உற்பத்தி பிரிவின் கொதிகலனில், கடந்த 7ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள் திருச்சி காவிரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
இதில் சர்புதீன் என்ற நிரந்தர ஊழியர் மே 8ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, நேற்று சண்முகம் (26) என்ற ஒப்பந்த தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி என்எல்சி அனல்மின் நிலையம் முன்பு இறந்த சண்முகத்தின் உறவினர்கள், சக ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்திவந்தனர்.
இதனைத் தொடர்ந்து என்எல்சி நிர்வாகத்தினர் உயிரிழந்த குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்குவதாக என்எல்சி நிறுவனத்தினர் உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க...மீண்டும் தேநீர்க் கடைகள்... இயல்பு நிலைக்குத் திரும்பிய சென்னை!