தஞ்சை-விக்கிரவாண்டி சாலையானது மிகவும் குறுகலாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகமிருந்தது. இதை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் தஞ்சை வரையிலான 165 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் நான்கு வழிச்சாலையாக 2006ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து விபத்தில்லாத சாலைகள் அமைக்கும் நோக்கில், இந்த சாலைக்கு மத்திய அரசு 2017ஆம் ஆண்டு ரூ. 3,517 கோடியை கூடுதலாக ஒதுக்கீடு செய்தது. அதன்படி தரம் உயர்த்தும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இந்தப் பணியை 2020ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை திட்டத்திற்கு இடையூறாக இருந்த நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. ஆர்ச் கேட்(NLC Arch gate) இடிக்கப்பட்டது.
நெய்வேலியின் அடையாள சின்னமாக கருதப்படும் ஆர்ச் கேட் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். நெய்வேலி மக்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்த பழமையான ஆர்ச் கேட் இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு ஆர்ச்களில் ஒன்று இடிக்கப்பட்ட நிலையில், மற்றொன்றும் ஓரிரு நாட்களில் இடிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.