கடலூர்: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில், தொடர் மழை பெய்தால் என்.எல்.சி. சுரங்கங்களில் தேங்கிய நீரை நிர்வாகம் உடனே வெளியேற்றக் கூடாது எனக் கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான பணீந்திர ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடலூரில் பணீந்திர ரெட்டி தலைமையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளரைச் சந்தித்த பணீந்திர ரெட்டி, "கடலூர் மாவட்டம் வடகிழக்குப் பருவ மழையின்போது கடுமையாகப் பாதிக்கப்படும் மாவட்டம் என்பதால் இந்த ஆண்டு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அதிகமாகப் பாதிப்பு ஏற்படும் இடங்களாக 92 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, தேவையான வடிகால் வசதிகள், பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், தொடர் மழை காலங்களில் என்.எல்.சி. நிர்வாகம் சுரங்களில் தேங்கியுள்ள நீரை முழுமையாக வெளியேற்றக் கூடாது.
மழை குறைந்த பின்னர் அருகில் உள்ள ஏரி, ஆறுகளில் குறைந்த அளவு நீர் இருந்தால் மட்டுமே சுரங்கங்களில் தேங்கியுள்ள நீரை குறைந்த அளவாகப் படிப்படியாக வெளியேற்ற வேண்டும்" எனக் கூறினார். இதனை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், வடகிழக்குப் பருவ மழையின்போது பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு கூறும் வகையில், 107.8 என்ற வானொலி நிலையம் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவருகிறது. அதனைப் பார்வையிட்ட அவர் வானொலி மூலம் பொதுமக்களுக்கு மழை காலங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முன்னறிவிப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கனமழையால் சரிந்த வீடு - ஏழு பேர் மரணம்