கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று (ஜன.4) நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், “நெய்வேலி என்எல்சி சுரங்க நீரை, குடிநீராக மாற்றும் பணி தொடங்கி உள்ளது. இந்த சுரங்க உபரிநீர் 479 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 740 குடியிருப்புகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீராக அனுப்பப்படும். தினமும் 31 எம்.எல்.டி நீரானது 769 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் வழங்கப்படும்.
இதற்காக அமைக்கப்படும் 179 சம்புகளால், 5 லட்சத்து 45 ஆயிரம் பேர் வடலூர், குறிஞ்சிப்பாடி பகுதியில் பயன்பெறுவார்கள். தமிழ்நாடு முழுவதுமே அனைத்து பெருநகரங்களிலும் குப்பைகளை கொட்டுவது பெரும் பிரச்சினையாக உள்ளது.
இதனை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளில்‘பையோ மைனிங்’முறைப்படி குப்பையை தரம் பிரித்து, மக்கும் குப்பையை உரமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.
இதையும் படிங்க: Sand Shortage: 'மணல் தட்டுப்பாட்டை போக்க விரைவில் அறிவிப்பு வெளியிடும் அரசு!'