கடலூர்: பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாலத்தைச் சேர்ந்தவர் பிஇ பட்டதாரி இளைஞர். இவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இவருக்கும் பண்ருட்டி நகரப் பகுதியைச் சேர்ந்த எம்எஸ்சி பட்டதாரியான பெண்ணுக்கும் நேற்று (ஜனவரி 20) காலை காடாம்பூலியுரில் தனியார் திருமண மண்டபத்தில் திருமண நடைபெறவிருந்தது.
முன்னதாக நேற்று முன்தினம் (ஜனவரி 19) இரவு பெண் அழைப்பு முடிந்து திருமண வரவேற்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. திருமணத்தில் வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் (Dj) டிஜே-வின் பாட்டுக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகளும் டிஜே பாடலுக்கு தனது உறவினர்களுடன் சேர்ந்து நடனமாடியதாகத் தெரிகிறது.
மணமகளுக்கு அறைவிட்ட மணமகன்
இதனைக் கண்ட மணமகன், மணமகளை மேடைக்கு வருமாறு கேட்டுள்ளார். அப்போது மணமகளை திடீரென மணமகன் கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள், அவரது உறவினர்கள் மணமகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருமணத்திற்கு முன்பே இப்படி நடந்துகொண்டால் வருங்காலத்தில் தனது பெண்ணின் நிலைமை என்னவாகும் என மணமகளின் பெற்றோர் கூறி திருமணத்தை நிறுத்தினர். தாங்கள் கொண்டுவந்த சீர்வரிசைகளை எடுத்துக்கொண்டு உறவினர்களுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
திகைத்து நின்ற மணமகன் குடும்பம்
இதனையடுத்து, மணமகளுக்கு உடனடியாக திருமணம் நடத்திவைக்க முடிவுசெய்த பெற்றோர் இரவோடு இரவாக செஞ்சியைச் சேர்ந்த முறைமாமனுக்கு பெண் வீட்டார் திருமணம் செய்ய முடிவுசெய்து, உடனடியாக பண்ருட்டி அருகேவுள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருமணத்தை செய்துவைத்தனர்.
மறுபக்கம் மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்தில் செய்வதறியாது திகைத்து நின்றனர். இது தொடர்பாக இதுவரை இருவீட்டார் தரப்பில் யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லாரி கிளீனரின் அந்நியன் அவதாரம் - அதிர்ச்சியடைந்த போலீஸ்