கடலூர்: புதுவண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வியும் (21), அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனும் (24), கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கலைச்செல்வி கர்ப்பம் அடைந்தார்.
இதையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு, தமிழ்ச்செல்வனை வலியுறுத்தியுள்ளார். அப்போது திருமணத்துக்கு தமிழ்ச்செல்வன் மறுத்துவிட்டார். இந்நிலையில் கலைச்செல்வியின் கர்ப்பம் வீட்டுக்கு தெரியஆரம்பித்தது.
இதைத்தொடர்ந்து, கலைச்செல்வி குடும்பத்தினர் தமிழ்ச்செல்வன் வீட்டிற்குச் சென்று திருமணத்துக்கு சம்மதம் கேட்டுள்ளனர். அப்போது தமிழ்ச்செல்வன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இதையடுத்து, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கலைச்செல்வி.காவல் ஆய்வாளர் மகேஸ்வரியும், உதவி ஆய்வாளர் எழிலரசியும் தமிழ்ச்செல்வனை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதலில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாத தமிழ்ச்செல்வன், பின்னர் கலைச்செல்வி காட்டிய அனைத்து ஆதாரங்களையும் பார்த்து, பின்னர் “நான் தான் கலைச்செல்வியின் கர்ப்பத்திற்கு காரணம் என ஒப்புக்கொண்டார்”.
மேலும் தான் கலைச்செல்வியை திருமணம் செய்ய தயாராக உள்ளதாகவும், தங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றும் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இரண்டு பேரும் மேஜர் என்பதால் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோயிலில், இவர்கள் இருவருக்கும் காவலர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். மேலும் மாப்பிள்ளைக்கு புது வேட்டி சட்டை, பெண்ணுக்கு கூரை புடவை, மாலை, தாலி உள்ளிட்டவை வாங்கி வரப்பட்டு திருமணம் நடத்தப்பட்டது.
இதில் கலைச்செல்வியின் பெற்றோர், காவலர்கள் மட்டுமே இருந்த நிலையில் அவர்கள் தாலி கட்டும்போது கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டு புதுமணத் தம்பதியரை வாழ்த்தினர்.
இதையும் படிங்க: இல்லம் தேடி வந்த சாதிச் சான்றிதழ் - மாவட்ட ஆட்சியரை வாழ்த்திய இருளர் இன மக்கள்!