கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக வரும் 13ஆம் தேதியன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதலாத்) நடைபெறுகிறது. கடலூர் மாவட்ட நீதிமன்றம், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, பரங்கிப்பேட்டை, திட்டக்குடி, காட்டுமன்னார்கோயில் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் இந்த மக்கள் நீதிமன்றம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
நான்கு மாதத்திற்கு ஒரு முறை அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி, குடும்ப விவகாரம், சிறு வழக்கு, சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள் போன்றவற்றிற்கு தீர்வு காணப்படும்.
கடலுார் மாவட்டத்தில் சுமார் 46 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், சமரசத் தீர்வு முறையில் தீர்வு காணப்படும் வழக்குகளாக 9,664 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். கடந்த முறை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,400 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.19 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய முடியாது. எனவே, நீண்டகாலமாக வழக்குகளை நிலுவையில் வைத்துள்ள வழக்காளிகள் தங்களது வழக்குரைஞர்களுடன் வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தில் நேரடியாக பங்கேற்கலாம். இங்கு, நீதிமன்ற கட்டணம் கிடையாது.
ஏற்கனவே கட்டணம் செலுத்தியிருந்தால் அக்கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படும். இது தொடர்பாக, வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 34 மேசைகள் அமைக்கப்பட்டு நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் வழக்கினை விசாரித்து சமரசம் செய்கிறார்கள். எனவே, இந்த வாய்ப்பினை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி கே. அய்யப்பன்பிள்ளை, தலைமை குற்றவியல் நீதிபதி எஸ். திருவேங்கடசீனிவாசன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் கே. ஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.