கடந்தாண்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின்போது, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம்' என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதனால் காங்கிரஸ் கட்சியினர், அவரை கைது செய்யவும், மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தினர்.
அதன்தாக்கம் குறைந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் என்பவர், ராஜீவ்காந்தியின் நினைவிடத்தின் முன் சீமான் பேசுவது போல 'ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம்' என டிக்டாக் செய்துள்ளார். அதன்விளைவாக மீண்டும் பெரும் சர்ச்சை கிளம்பியது. அதனால் அவரை கைது செய்ய காங்கிரஸ் கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று கடலூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் அவரைத் தரக்குறைவாக விமர்சித்துப் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் பேச்சு கண்டிக்கத்தக்கது. அப்படி உயிரிழந்தவர்களை தரைகுறைவாக பேதுவது தமிழ் நாகரிகமா?, அது ஏற்புடையதா? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பதை அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் எனக் கூறினார். சம்பந்தப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தமிழ்நாடு அரசு வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சீமானை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்'