கடலூர்: பண்ருட்டி அருகே காடாம்புலியூர் அடுத்த புரங்கணி கிராமத்தில் 'முரட்டுக்காளை' என்ற இளைஞர்களைக்கொண்ட குழுவினர் கபடி விளையாடி வருகின்றனர். நேற்று இரவு பண்ருட்டி அடுத்த மணாடிகுப்பம் பகுதியில் மாவட்ட அளவிலான கபடிப்போட்டி நடைபெற்றது. இதில் புரங்கணி கிராமத்தைச்சேர்ந்த முரட்டுக்காளை அணியைச்சேர்ந்த கபடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
அப்போது இக்குழுவைச்சேர்ந்த கபடி வீரர் விமல் (26) எதிர் அணியுடன் விளையாடும்பொழுது ஒருவரைத்தொட்டு விட்டு லாவகமாக துள்ளிக்குதித்து கோட்டைத் தொட்டு இரு புள்ளிகள் பெற்றார். அப்போது எதிர்பாராத சூழ்நிலையில் எழுந்து மீண்டும் மயங்கி கீழே விழுந்தார். இதனைத்தொடர்ந்து நண்பர்கள் உடனடியாக விமலை பண்ருட்டி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரைப்பரிசோதித்த மருத்துவர்கள் விமல் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.
விமலின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லுரியில் பிரேதப்பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கபடி வீரர் விமல் விளையாடும் பொழுது அதனை நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப்பரவி வருகிறது.
ஒரு விளையாட்டு வீரர் விளையாட்டுத்திடலிலேயே உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவள்ளூர் அருகே விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை