கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் நேற்றிரவு (அக்.19) வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் பின்பக்கத்திலுள்ள கழிவறையின் ஜன்னலை உடைத்து அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வீட்டினுள் புகுந்துள்ளது.
தொடர்ந்து, பீரோவைத் திறந்து அதில் வைத்திருந்த 72 சவரன் தங்க நகைகள், ஆறு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த வீட்டின் அருகில் இருந்த ராம் குமார் என்பவரது வீட்டின் உள்ளே புகுந்த அதே கும்பல், அறையிலிருந்த பீரோவை திறக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால், பீரோவைத் திறக்க முடியாததால் அதைத் தூக்கிச்சென்று வீட்டின் பின்புறமுள்ள வயல் பகுதியில் உடைத்து, அதிலிருந்த 37 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவல் தெரிய வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர்கள், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட காவல் துறையினர், அங்கு ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.