கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கட்டடங்கள் கட்டியதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என பல்வேறு சர்ச்சைகள் மற்றும் புகார்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் 3 அதிகாரிகள் மற்றும் தொல்லியல் துறையின் 3 அதிகாரிகள் கொண்ட 6 பேர் குழு அமைத்தது. இந்த குழுவினர் தற்போது நடராஜர் கோயிலில் ஆய்வு செய்துள்ளனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சங்கர் ஐஏஎஸ் கூறியதாவது, “சிதம்பரம் நடராஜர் கோயிலில் விதிமுறைகளை மீறி கட்டுமானங்கள் கட்டியது கண்டறியப்பட்டுள்ளது. பூங்கா அமைக்கப்பட்டது, முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்களில் அறைகள் கட்டியது, புராதனச் சின்னங்கள் மறைக்கப்பட்டது, கோயிலில் புராதன ஓவியங்கள் அழிக்கப்பட்டது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செயல் எந்தவித அனுமதியுமின்றி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட எந்த துறைகளிலும் அனுமதி இல்லாமல் இந்தப் பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும், கோயிலுக்குள்ளே புதிதாக போர்வெல் போடப்பட்டது, அன்னதான மண்டபம் கட்டியது, கோசாலை கட்டியது, ராஜகோபுரங்களுக்கு இடையூறாக சிறிய சன்னதிகள் கட்டப்பட்டது, கல்வெட்டுகள் மறைக்கப்பட்டது உள்ளிட்ட விதிமீறல்களும் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுகள் குறித்தும், விதிமீறல்கள் குறித்தும் இந்தக் குழு வீடியோவாக பதிவு செய்துள்ளது. இவற்றை வைத்து அறிக்கை தயாரித்து சில நாட்களில் அரசிடம் ஒப்படைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இவ்வாறு ஆய்வு செய்ததையடுத்து, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது, “நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், ஆய்வுக்கு வருவதற்கு தகுதியில்லை. முறையாக சட்டப்படி எங்களுக்கு அறிவிப்பு கொடுக்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறைக்கு எங்களது ஆட்சேபனையை தெரிவித்திருக்கிறோம்.
நீதிமன்றத்தில் அதிகாரிகள் தவறான தகவலை அளித்திருக்கிறார்கள். மறு ஆய்வு மனுவிற்கு முன்பாக, இந்த ஆய்வில் ஈடுபட்டது சட்டத்திற்கு புறம்பானது. இது எங்களை கட்டுப்படுத்தாது. சட்டத்தை தவறாக பயன்படுத்தி, இந்து சமய அறநிலையத் துறையினர் தீட்சிதர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகின்றனர். கோயிலில் அனுமதி இல்லாமல், எந்த புதிய கட்டுமானமும் கட்டப்படவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: தருமபுரியில் ராணுவ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.. மக்களவையில் திமுக எம்.பி வேண்டுகோள்..