கடலூர்: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் உள்ளே உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளினை முன்னிட்டு, பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறப்பு நிகழ்ச்சி இன்று காலை 5.50 மணிக்கு நடைபெற்றது. இதில் அரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.
வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11ஆம் நாளினை வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடுகின்றனர். பெருமாளின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் அன்று திறக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இந்நாளில் முன்னிரவில் உறங்காது இருந்து அதிகாலையில் பெருமாள் கோயில்களில் அன்று மட்டும் திறக்கும் வடக்குத் திசையில் உள்ள பரமபத வாயில் என்றழைக்கப்படும் வாயில் வழியே சென்று இறைவனை வழிபடுவர்.
108 வைணவத் திருத்தலங்களில் 23-வது திருத்தலமாக தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீகுலசேகர ஆழ்வாரும், ஸ்ரீதிருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று கோவிந்தராஜப்பெருமாளுக்கு காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆண்டாள் அருளித்த திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன. பின்னர் உற்வச மூர்த்தி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பரமபாத வாசலில் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து பூதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீஆண்டாள் சமேத ஸ்ரீதில்லைகோவிந்தராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு