கடலூர் மாவட்டம் கே.என் பேட்டை திருப்பதி நகரிலுள்ள வீட்டில் குட்கா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் காவல்துறையினர், உணவு பாதுகாப்புத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட 7 டன் குட்கா, ஹன்ஸ் வகை போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதன் மதிப்பு சுமார் ரூ. 1.5 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் மகேஸ்வரி என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திருப்பாதிரிப்புலியூர் கோயில் தெருவில் உள்ள பாரதி (36) என்பவர் வாடகைக்கு எடுத்து புகையிலை, பாக்கு போன்றவற்றை விற்பனை செய்து வந்ததும், அதன் விநியோகஸ்தராக சரவணன் (49) என்பவரும், இதற்கு உடந்தையாக ராம்குமார், பிரசாத், தேவநாதன் கணபதி ஆகியோர் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து திருப்பாதிரிப்புலியூரில் மளிகை கடை நடத்தி வரும் பாரதி, சரவணன், ராம்குமார் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள பிரசாத், தேவநாதன், கணபதி ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மதுரையில் பிரபல கம்பெனி பெயரில் போலி பீடி தயாரிப்பு - போலீஸ் விசாரணை!