கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள ஊமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமொழி (20). இவர் இன்று கைக்குழந்தையுடன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், ”கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த ஊமங்கலம் கிராமத்தில் வசித்துவருகிறேன். அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தேன். அப்போது முதனை கிராமத்தில் வசிக்கும் எனது மாமாவின் மகன் ராகுல் ராஜ் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தோம். பின்னர் ராகுல் ராஜ் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் என்னை பலமுறை உல்லசமாக இருந்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். நான் கர்ப்பமடைந்த செய்தியை ராகுல் ராஜிடம் தெரிவித்தேன். உடனே ராகுல் ராஜ் இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்து என்னை திருமணம் செய்துகொள்கிறேன் எனக் கூறினார். ஆனால் சிறிது காலம் என்னிடம் அவர் சரியாக பதில் சொல்லாமல் காலம் கடத்திவந்தார்.
இதையடுத்து ராகுல் ராஜின் பெற்றோரிடம் நடந்த விவரத்தைக் கூறி திருமணம் செய்து வைக்க கூறியதற்கு, அவர்கள் என்னை தகாத வார்த்தையில் திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர். இதற்கிடையே கடந்த மாதம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையறிந்த ராகுல் ராஜின் பெற்றோர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இது தொடர்பாக நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே என்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி குழந்தை பெற்றுக் கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயலும் ராகுல் ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.