கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அடுத்த நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த பார்வதி என்பவரது வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பதாக கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தபோது, ஆயிரத்து 120 லிட்டர் எரிசாராயம் மற்றும் போலி ஸ்டிக்கர், பாட்டில் வைத்திருந்தை கண்டுபிடித்தனர்.
பின்னர் கள்ளச்சாராயம் தயாரித்த காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்த சின்னமொட்டையன் (எ) சதீஷ்குமார்(28) மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ்(35 ) ஆகியோரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் மேலகுண்டலபாடி ரயில்வே கேட் பகுதியில் கள்ளசாராயம் விற்பனை செய்த பெராம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி கடலூர் மாவட்டம், பணங்காட்டு பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனை செய்யப்படுவதாக முத்துநகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது, வனிதா என்பவரது வீட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர், வீட்டில் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த ஒருமாத காலத்தில் இதுவரை பெண் உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது!