கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வேலை இழந்து, வருவாய் இன்றி, வாழ்வாதாரத்தைத் தொலைத்து கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பொதுமக்களின் நிலையை அறிந்து, அவர்களுக்கு உதவி செய்ய திமுக 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் கீழ் தொலைபேசி எண் அறிவித்து இருந்தது. அந்தத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் திமுக செய்துவருகிறது.
அதன்படி, இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவிகள் திமுக சார்பில் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அரசின் பங்களிப்பாக அரசு செய்ய வேண்டிய பொறுப்புள்ள கடமைகளை, அரசுக்கு உணர்த்தும் வகையில் இந்தத் திட்டத்தின் கீழ் உதவி கோரிய மூன்றாயிரத்து 371 நபர்களின் கோரிக்கை மனுக்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் திமுகவினர் வழங்கினர்.
அப்போது, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ், மேற்கு மாவட்டச் செயலாளர் சி.வெ. கணேசன், நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா. ராஜேந்திரன், புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினர் துரை.கி. சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "மார்ச் மாதம் தொடங்கிய இந்த கரோனா நோய்த் தொற்று தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மத்திய அரசு நினைத்திருந்தால் அப்போதே விமான நிலையத்தை மூடி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும்.
அப்படி மூடப்படாமல் மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டதன் விளைவு தான் கரோனா பாதிப்பு. மேலும், சுகாதாரத் துறை மிகவும் அலட்சியத்தோடு செயல்பட்டதன் விளைவு தான் தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க:'மக்களுக்கு அரசால் செய்ய முடியாத உதவிகளை திமுக செய்கிறது' - கீதா ஜீவன்