கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வீரமுடையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிமணி என்ற நபர் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தகவல் பரப்பியுள்ளார். இதையடுத்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேரிடம் தலா ரூ. 3 லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளார்.
அதன்பின் சில நாட்கள் கழித்து ஐந்து பேரை மட்டும் அர்மேனியா நாட்டிற்கு கூட்டிச்சென்று அங்கேயே இரண்டு மாதங்கள் தங்கவைத்துள்ளார். அங்கு தங்கியிருந்தவர்களுக்கு வேலை வாங்கித்தர காலம் தாழ்த்திய நிலையில், ஜோதிமணி ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
பின்னர் ஜோதிமணி தலைமறைவாகிவிட, அர்மேனியாவில் இருந்து வீட்டில் உள்ளவர்களின் உதவியால் அந்த ஐந்து பேரும் இந்தியா திரும்பியுள்ளனர். விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த இளைஞர்கள் அர்மேனியா தூதரகத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே பணத்தை பறிகொடுத்த கடலூரைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களின் பணத்தை மீட்டுத் தரக்கோரி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: கேரளா விரைந்த மத்திய குற்றப் பிரிவு போலீஸ்