கடலூர் மாவட்டம், பண்ருட்டி எல்.என்.புரத்தைச் சேர்ந்தவர் சையது கலீல். இவர் பண்ருட்டி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சீனியர் அசிஸ்டன்ட்டாக பணியாற்றி வந்தார். பின்னர், அதே வங்கியில் தன்னுடன் பணியாற்றிய லட்சுமி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் கமால் பாபு என்பவரைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். குழந்தையாக இருந்த கமால் பாபுவை வங்கிக்குச் செல்லும்போது தன்னுடன் அழைத்துச் செல்வார்கள். மேலும் 15 வயது கமால் பாபுவுக்கு அவருடைய தந்தை சையது கலீல், தன்னுடைய வேலையை வேடிக்கையாக கற்றுக் கொடுத்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, பணியில் இருக்கும்போதே சையது கலீல் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் கமால் பாபு மன ரீதியில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் வாரிசுதாரர் அடிப்படையில் தந்தையின் வேலை தனக்கு வேண்டும் என கமால் பாபு மின்னஞ்சல் மூலம் வங்கி மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். தொடர்ந்து நேரில் சென்று பலமுறையும் கேட்டும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

இதனால் மன விரக்தியில் அதிக பாதிப்புக்குள்ளான கமால் பாபு, அதே பகுதியில் உள்ள வடக்கு பஜாரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்கிற பெயரில் வங்கி கிளை தொடங்க அனுமதிக்குமாறு, வங்கி மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த மின்னஞ்சலை வங்கி நிர்வாகம் பெரியதாக கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, மேலும் மன ரீதியில் பாதிக்கப்பட்ட கமால் பாபு, வீட்டுக்குள்ளயே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருப்பது போல கம்ப்யூட்டர், பிரின்டர், செல்லான், வங்கி சீல், 16 பேர் வேலை செய்வது போல் வருகைப் பதிவு என போலியாக ஒரு வங்கியை செட்டப் செய்து உள்ளார். அதனைத்தொடர்ந்து தனது அம்மா, பெரியம்மாவின் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்டு தெரிந்திருந்ததால் இவர்களுக்குள் மட்டும் பணத்தை ஆன்லைன் பரிமாற்றம் செய்துள்ளார். மற்றபடி வேறு யாருக்கும் தொந்தரவு தரவில்லை.
இந்நிலையில் இந்த குடும்பத்தாரிடம் வட்டிக்கு வாங்கியவர்கள் இதுகுறித்து எஸ்பிஐ அதிகாரியிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மேலாளர் வெங்கடேஷ் பண்ருட்டி காவல் நிலையத்தில் கடந்த 8ஆம் தேதி புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் போலியாக நடத்தப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது கமால் பாபுவின் வீட்டிலிருந்த கம்ப்யூட்டரை ஆய்வு செய்யும்போது பண்ருட்டி நார்த் பஜார் பாரத ஸ்டேட் வங்கி என்ற இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இதனை ஆய்வு செய்தபோது அது போலி எனத் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவர் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், பிரின்டர், செல்லான், வங்கி சீல் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், கமால் பாபு மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் செல்லான் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்து கொடுத்த ஈஸ்வரி, ரப்பர் ஸ்டாம்ப் உரிமையாளர் மாணிக்கம் (52), அருணா பிரின்டர்ஸ் உரிமையாளர் குமார் (42) ஆகியோரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் இருவரும் கமால் பாபுவின் தந்தை வங்கியில் வேலை பார்த்தது தெரியவந்தது.
அதுபோல கமால் பாபுவின் தாயாரும் வங்கியில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் வங்கி ஆர்டர் கொடுத்துள்ளனர் என நினைத்து தான் இதை செய்து கொடுத்தோம் என்று கைதானவர்கள் கூறினர். பின்னர் பண்ருட்டி காவல் துறையினர் கமால் பாபு, ரப்பர் ஸ்டாம்ப் உரிமையாளர், பிரின்டர்ஸ் உரிமையாளர் ஆகிய மூவரையும் கைது செய்ததோடு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த ஏஜென்ட் கைது