மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது . இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது. இந்நிலையில் விருத்தாசலம் பகுதியிலிருந்து கடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேவையான 291 வாக்குப்பதிவு இயந்திரம், 291 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம், 296 வாக்கு அளித்ததை சரி பார்க்கும் கருவி கடந்த மார்ச் 28ஆம் தேதி கடலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கடலூர் மக்களவைத் தேர்தலில் 21 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னம் மட்டுமே பொருத்த முடியும் என்பதால் கூடுதலாக இயந்திரங்கள் கோரப்பட்டன. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு மேலும் 291 வாக்குப்பதிவு இயந்திரம் 291 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம் கொண்டுவரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை சார் ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இப்பணியை அதிகாரிகள் விறுவிறுப்பாக செய்தபோது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும் நாம் தமிழர் கட்சி சின்னம் தெளிவாக இல்லை. இதனால் பொதுமக்கள் வாக்களிக்கும்போது நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களிக்க சிரமப்படுவார்கள் எனக் கூறி சார் ஆட்சியர் சரயுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிர்வாகியை சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அவர் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவல்துறையை அழையுங்கள் என அதிகாரிகளிடம் சார் ஆட்சியர் கூறினார். மேலும், உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என நாம் தமிழர் நிர்வாகியிடம் எச்சரிக்கை விடுத்தார். அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினரும் வாக்குவாத்தில் ஈடுபட்ட நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பணிகள் பாதிக்கப்பட்டன.